கடந்த சில வருடங்களாக மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று, மண் பற்று ஆகியவை அரசியலின் மைய புள்ளியாக மாறி வருவதை காணமுடிகிறது. ஆனால், உள்ளார்ந்து பார்க்கும் போது மேற்பரப்பில் உள்ள கருத்துக்களை அதுவும் உதட்டு அளவில் பின்பற்றி வருகிறோம். ஏனெனில் நம் வாழ்க்கை முறை இன்று முற்றிலும் மேற்கத்திய முறையில் தான் அமைந்து இருக்கின்றது பெயரளவில் மட்டுமே நாம் இந்தியர்கள், தமிழர்கள். 5000ஆம் ஆண்டு தொன்மையான நம் கலாசாரத்தின் அடிச்சுவடே அறம், பொருள், இன்பம், வீடு (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்று வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்து வாழ்வது தான், ஆனால் இன்று மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சி காரணமாக நாம் மரணத்தின் வாயில் வரை இன்பத்தை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளமே தவிர வீடு அல்லது மோட்சம் என்பதையே ஆராய்வதில்லை. வேதங்களை வரிசைப்படுத்தும் போது இறுதியாக ஞானத்தின் வாயிலான உபநிஷத்துகளை வைத்தனர், ஆனால் ஏனோ இன்று பொருளாசையிலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. நம் உண்மையில் நம் தொன்மையான கலாசாரத்தை ஒன்றி வாழ்ந்தால் இன்று அதிக இயற்கை வள சுரண்டல் போன்றவை ஏற்படாமல் பூமியும் சமநிலையோடு இருக்கும்.
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, அதாவது தூய தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று, ஆனால் நடந்தது என்னவென்றால் பெயர் மட்டும் அவ்வாறு அமைத்துக் கொண்டு கதை சம்பந்தம் இல்லாமல் பல படங்கள் வெளிவந்தன. அது போலவே தேர்தல் கவர்ச்சிக்காக உதட்டு அளவில் மட்டும் மொழிப்பற்று, கலாசார தொன்மை மட்டும் பேசாமல், நாம் நம் இலக்கியங்களை , அற நூல்களை ஆராய்ந்து பார்த்தால், அவை முழுவதையும் கடைப்பிடிக்காமல் போனாலும், மனதின் ஒரு ஓரத்தில் இருந்து அவை நம்மை வழிநடத்தும்.
Comments
Post a Comment