பொதுவாக புத்தகங்களைப் பற்றி இங்கு எழுதுவதில்லை. ஆனால், பாலகுமாரன் ஐயாவின் இந்த புத்தகத்தைக் குறிப்பிட வேண்டும் என்பது உள்ளுணர்வின் உந்துதலும், சில அறிகுறிகளும். இன்று தான் இந்த புத்தகம் கிடைத்தது, இப்போது தான் தொடங்கினாலும், ஆனால் பல முக்கியமான மனதை உற்று நோக்கும் ஆழமான, ஆனால் எளிமையான பாணியிலுள்ள கருத்துகள் இருக்கும் பொக்கிஷம் என்றே புலப்படுகிறது.
உண்மையில் அகந்தையை அழிப்பதே ஆன்மீகத்தின் ஆரம்பம். ஆனால், அவ்வளவு சீக்கிரம் அகந்தையும், மனதின் வாசனைகளும் நம்மை விட்டு விலகாது, இதை நாம் பல சமயங்களில் சொந்த அனுபவத்தில் கண்டுவருகிறோம். நாம் அகந்தையை விட்டு விட வேண்டும் என்று நினைக்கும் போது தான், சில சந்தர்ப்பங்கள் அதை தூண்டி விட கூடிய வகையில் அமைகிறது. இதற்கு காரணம் நம் கர்ம வினைகளே என்று இவன் கருதிக் கொள்வது. ஒரு எல்லை வரை இதைக் கடக்கப் பக்தியே ஒருவனுக்கு உதவும் என்பது இவனின் அபிப்பிராயம்.
கிருஷ்ணாஜியின் பேச்சுகளும், எழுத்துகளும் பொதுப்படையாகப் பார்க்கும்
போது கூர்மையாகத் தெரிந்தாலும், நம்மை ஆழமாகத் தோண்டி பார்க்கவே அந்தக் கூர்மைப் பயன்படுகிறது. எதற்கும் துணிந்தவர்களுக்கு, பல பிறவிகளில் தவம் இருந்தவர்களுக்கு சட்டென்று அது புலப்பட்டுவிடலாம். ஆனால் நம்மை போன்ற பெரும்பான்மையானவர்களுக்கு பக்தி என்ற துடுப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் நாம் கேட்டுப்பெற்றே பழகி விட்டோம், கொடுத்து பழகவில்லை.
மொத்தத்தில் நாம் வினைகளால் பின்னப் பட்டு இருக்கிறோம்.
"இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புரிந்தார் மாட்டு"
~திருக்குறள்
"மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே"
Comments
Post a Comment