நிலையற்றதில் மனம் நிலைப்பெற முயலும் போது மனம் சஞ்சலம் கொள்கிறது, உண்மையில் மனதை நிலைப்பெற செய்ய முடியுமா ? மனம் காலத்தால் கட்டுப்பட்டு இருக்கும் வரை நகர்தலிலேயே உள்ளது.
உதாரணமாக, ஒரு உணவகத்திற்கு செல்கிறோம், நாம் மசால் தோசை வாங்குகிறோம் ஆனால் எதிரிலிருப்பவர் இட்லி வாங்கினால் அதுவே உயர்ந்ததாக காட்சி தருகின்றது. அதே போல் துணி கடையில் இரண்டு மணி நேரம் பார்த்து எந்த துணி எடுத்தாலும் கடையில் இருந்து வெளியே வரும் போது இந்த துணியை எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று மனம் ஏங்குகிறது.
மனதை நிலைப்பெற செய்வதற்காகவே பல்வேறு யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
யோகம் என்ற சொல்லுக்கு இரண்டற கலப்பது என்ற பொருள் உள்ளது. கர்ம யோகம் -> கர்மத்தோடு அதாவது செய்யும் செயலோடு இரண்டற கலப்பது, பக்தி யோகம் -> பக்தியோடு இரண்டற கலப்பது, தியான யோகம் -> தியானத்தோடு இரண்டற கலப்பது, ஞான யோகம் -> இவ்வனைத்து யோகங்களில் இறுதி நிலையே ஞான யோகமாக உள்ளது.
இதையே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, "The observer is the observed" -> "உற்று நோக்குபவனே உற்று நோக்கப்படுகிறான்", என்று குறிப்பிடவதாக உணர்கிறேன்.
இவ்வாறு மனம் விழிப்போடு ஆழமான அமைதியில் உள்ள நிலையில் அதிர்ஷ்டமும், பிரபஞ்ச சக்தியின் கருணையும் இருந்தால் அற்புதத்தை உணரமுடியும் என்பதை செவி வழியாக இவன் கேட்கப் பெற்றுள்ளான்.
இதையே அனைத்து மதங்களும் அவரவர் பாணியில் குறிப்பிடுவதாக உணர்கிறோம். நிர்வாணா என்ற பேரமைதி நிலையாக புத்தர் குறிப்பிடவதும் இதுவே. உலகில் ஒவ்வொரு அணுவையும் இயக்குபவன் அவனே, அவன் எங்கும் எதிலும் இருக்கிறான். அவனை வார்த்தையால் விவரிக்க முடியுமா ?!
அவனை சிவன் என்று அத்வைத தத்துவமான அருவ வழிப்பாட்டை அடிப்பையாக கொண்ட சைவர்களும், விஷ்ணு என்று த்வைத தத்துவமான உருவ வழிபாட்டை அடிப்படையாக கொண்ட வைணவர்களும், அல்லாஹ் என்று இஸ்லாமியர்களும், பரமபிதாவே என்று கிறிஸ்தவர்களும் குறிப்பிடுவதாக உணர்கிறேன். கடவுள் என்ற மாபெரும் சாகரத்தை படித்து அறிந்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவன் அளக்கபட முடியாதவன், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவன், அவனை உணர்ந்து மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும். அந்தக் பெருங்கருணை கொண்டவனை அறிவதற்கு இருக்கும் இடம் ஒரு தடையல்ல, பிறந்ந நாடு ஒரு தடையல்ல, பிறந்த இடம் தடையல்ல, இப்பூமியில் பெருமைமிகு மனிதப் பிறவி எடுத்த யாவருமே கர்மவினையிலிருந்து விடுபட்டு அவனை அறிய முற்பட்டு அவன் கருணை இருந்தால் உணர முடியும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து. செயலைத் துறப்பது துறவு அன்று, செயலின் விளைவைத் துறப்பது துறவு.
இதை சமயப் பாடல்களின் எடுத்துக்காட்டோடு பார்ப்போம்.
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா (உருவமும் அருவமும் ஒன்றானவன்) :
"உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய்"
சிவபுராணம் (சொற்களுக்கு அப்பாற் பட்டவன்) :
"நல்லிலிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே !
சொல்லற்கு அரியானை சொல்லித் திருவடி கீழ் !"
விநாயகர் அகவல் (ஞானம், முக்தி, மனம் இல்லா நிலை) :
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
திவ்ய பிரபந்தம் (நம்மாழ்வார் பாசுரம் -> மோட்சத்தைப் பற்றி) :
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே
திருக்குறள் :
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
பொருளரை (சாலமன் பாப்பையா) :
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
சில வார்தைகளின் உண்மையான அர்த்தங்கள் :
கலாச்சார மாறுதல்களால் சில அற்புத வார்த்தைகளின் அர்த்தம் உட்புறமாக இருந்து வெளிப்புறமாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஜிடு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாயிலாக கேட்டுப் பெற்றது, மொழிபெயர்ப்பில் அரத்தம் திரிந்து விட கூடாது என்பதற்காக ஆங்கிலத்திலேயே கொடுக்கிறோம்
Guru -> Weight, One who dispels darkness, and one doesn't impose her/his views on another
Mantra -> Pondering over not becoming, dissolve or put away self centred activity
Vedanta -> End of knowledge or end of the known
பின்குறிப்பு :
இந்த மாபெரும் பிரபஞ்ச சக்தியைப் பற்றி எழுதும் பக்குவம் இவனுக்கு உள்ளதா என்று தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒரு உந்துதலால் இவன் எழுதி விட்டான். இவன் இந்திரியங்களைக் கடந்தவன் அல்ல. இப்பிரபஞ்சத்தை இயக்குபவனின் பற்றி அறிந்து கொள்ள உள்ள ஆவாலால், அவனை உணர்ந்தவர்களின் கருணையால் எழுதப்பட்டது. மாபெரும் ஆசான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், சத்தியத்தின் பரிபாலனங்களை எளிமையாக எடுத்துரைத்த எழுத்து சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்களையும், சற்குருநாதன் யோகி ராம்சுரத்குமார் அவர்களையும் போற்றி பணிந்து இக்கட்டுரையை இங்ஙனம் நிறைவு செய்கிறோம்.
Comments
Post a Comment